×

போதைப்பொருளுக்கு அடிமையான மலையாள நடிகர்கள் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசிக்கு தடை

திருவனந்தபுரம்: போதைப்பொருள் பயன்படுத்தி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதால், மலையாள நடிகர்கள் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தடை விதித்துள்ளதாக மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மலையாளப் படவுலகில் முன்னணி இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி. கடந்த 2010ல் ஷேன் நிகம் ‘தாந்தோன்னி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு ‘கிஸ்மத்’, ‘ஈடா’, ‘இஷ்க்’, ‘பூதகாலம்’, ‘வெயில்’, ‘உல்லாசம்’, ‘கொரோனா பேப்பர்ஸ்’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். கடந்த 2011ல் ‘பிரணயம்’ என்ற படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமான ஸ்ரீநாத் பாசி, பிறகு ‘ஹனி பீ’, ‘இப்லீஸ்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘அஞ்சாம் பாதிரா’, ‘கப்பேலா’, ‘ஹோம்’ உள்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவர் முதல்முறை ஹீரோவாக நடித்த ‘சட்டம்பி’ என்ற படம் வெளியானது. தற்போது மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் படப்பிடிப்பு தளத்தில் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மலையாள தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்க தலைவரும், இயக்குனருமான உன்னி கிருஷ்ணன் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், இருவருடைய தொல்லையும் குறையவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று கொச்சியில் அவசர ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டது.

மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ரஞ்சித் கூறுகையில், ‘நடிகர்கள் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் தொடர்ந்து அனைவருக்கும் இடையூறு செய்து வருகின்றனர். போதைப்பொருளுக்கு அடிமையான அவர்களுடைய தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை. எடிட்டிங் உள்பட பல விவகாரங்களில் வீணாக தலையிடுகின்றனர். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு மலையாளப் படவுலகில் தடை விதிக்க தீர்மானித்துள்ளோம். அவர்கள் மட்டுமின்றி, மலையாள திரையுலகில் ஏராளமான நடிகர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் விபரங்களை விரைவில் போலீசிடம் தெரிவிக்க திட்டமிட்டுள்ளோம். ஒட்டுமொத்த திரையுலகின் நன்மைக்காகவே இதை நாங்கள் செய்கிறோம்’ என்றார்.

The post போதைப்பொருளுக்கு அடிமையான மலையாள நடிகர்கள் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசிக்கு தடை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shane Nigam ,Srinath Pasi ,Thiruvananthapuram ,Malayalam Film Producers and Actors Association ,Srinath Bhasi ,Shane ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...